One who worships Goddess Kamakshi will be relieved from all malefic effects of Navagraha's/9 planets as said by Mookar in Mooka Panchasathi in sloka 59 out of 500 slokas.
Youtube Link: https://www.youtube.com/watch?v=R5PX2Wx3380
காமாட்சி அனுக்ரகம் பற்றி மகா பெரியவர்
காமாட்சி சகல கஷ்டத்தையும் நிவர்த்தி பண்ணிப் பரமானந்தத்தை அளிக்கிறவள். நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஜ்யோதிஷ ரீதியில் நவகிரகங்களைத்தானே காரணமாகச் சொல்கிறார்கள்? இந்த நவகிரக பாதிப்பு எதுவும் அவள் பாதத்தை ஸ்மரிக்கிறவருக்கு ஏற்படாது என்று பொருள்படுமாறு ‘மூக பஞ்சசதி’யில் – வார்த்தை விளையாட்டுப் பண்ணி, ஒரு ச்லோகம் இருக்கிறது. மூக பஞ்சசதி என்பது ஞானம், பக்தி, சாக்த சாஸ்த்ர தத்வங்கள், காவ்ய ரஸம் எல்லாம் சேர்ந்ததாகக் காமாட்சியைப் பற்றி மூகர் என்பவர் அநுக்ரஹித்துள்ள ஐநூறு ச்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். இவற்றிலொன்று தான் நவகிரகங்களில் ஒவ்வொன்றின் தன்மையும் அம்பாளின் சரணாரவிந்தத்தில் இருப்பதாகச் சொல்லும் ச்லோகம்.
ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
விநம்ராணாம் ஸௌம்யோ குருரபி கவித்வம் ச கலயந்
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ விஜயதே
(பாதாரவிந்த சதகம் – 59)
சூரியன் : ப்ரகாசிப்பதாலே ‘பாஸ்வத் தாம்’ என்று அந்தப் பாதத்தைச் சொல்கிறார். நவகிரகங்களில் முதலில் வரும் ஸூர்யனின் தன்மை இதுதானே? ‘பாஸ்கரன்’ என்றே அவனுக்கு ஒரு பேர்.
சந்திரன் : அம்பாள் சரணத்திலிருந்து அம்ருதம் கொட்டுகிறது. இதை ‘அம்ருத நிலய:’ என்கிறார். யோகிகள் சிரஸின் உச்சியில் அவளுடைய பாத பத்மத்தின் அம்ருதம் பெருகுவதில் அப்படியே ‘உச்சி குளிர்ந்து’ இருப்பார்கள். ‘சரணாம்ருதம்’ என்றே சொல்வது வழக்கம். இதேபோல அம்ருதம் பெருக்குகிற தன்மை சந்திரனுக்கு உண்டு. அதனால்தான் ‘ஸுதாகரன்’ என்று பெயர்.
செவ்வாய் : ‘லோஹிதவபு:’ என்று ச்லோகத்தில் இருப்பதற்கு, ‘சிவந்த ரூபமுள்ளது’ என்று அர்த்தம். சிவப்பாயிருப்பதுதான் செவ்வாய். ‘விநம்ராணாம் ஸௌம்ய:’ அந்தப் பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு, அது ஸௌம்யமாயிருக்கிறது. மனஸுக்குப் பரமஹிதமாக, ம்ருதுவாக, சாந்தமாக இருப்பதெல்லாம் ஸௌம்யம். உக்ர தேவதை என்பதற்கு ஆப்போஸிட்டாக ஸௌம்ய தேவதை என்கிறோம்.
புதன் : ‘சோம’ என்ற சந்திரனிலிருந்து உண்டானதே ‘ஸௌம்யம்.’ நிலவு போலக் கோமளமாக, சாந்தமும் ஹிதமும் தருவதாக இருப்பதையெல்லாம் ஸௌம்யம் என்கிறோம். சோமனுக்குப் புத்ரனாக உண்டானவன் புதன். அதனால் அவனுக்கு ஸௌம்யன் என்று பேர்.
குரு : அம்பாள் பாதம் ‘குரு ரபி’ – ‘குரு: அபி’ என்கிறார். ‘குருவானதும்கூட’ என்கிறார். குரு என்றால் குணவிசேஷத்தால் பெரியது என்று அர்த்தம். அதோடுகூட, அந்தப் பாதம் க்ஷணகாலம் பட்டுவிட்டால் திருவடி தீக்ஷையினாலே ப்ரஹ்ம ஞானமே ஸித்தித்துவிடும். இப்படி ஞானம் தருவதாலும் அது குருவாயிருக்கிறது. குரு என்றால் வியாழன். குருவாரம் என்றே அந்தக் கிழமைக்குப் பேர்.
சுக்கிரன் : ‘கவித்வம் சகல யந்’ – கவித்வத்தையும் அநுக்ரஹித்துவிடுகிறது அம்பாள் பாதம். அவளருளால் அருட்கவியாகி, ஒரு காலத்தில் தாம் மூகனாயிருந்ததை லோகமெல்லாம் அறிய வேண்டுமென்பதால், ‘மூகர்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்தான் இந்த ச்லோகத்தைப் பண்ணியிருப்பவரே! நவகிரகங்களில் கவித்வகாரகன் வெள்ளிக் கிழமைக்குரிய சுக்ரன். ‘குரு’ என்று வெறுமே சொன்னால், அது தேவகுருவான ப்ருஹஸ்பதியைத்தான் குறிக்கும். அப்படியே ‘கவி’ என்று வெறுமே சொன்னால், அது அஸுர குருவான சுக்ராச்சாரியாரைத்தான் குறிப்பிடும். கவித்வ சக்தி அருளுவதால், அம்பாளின் பாதம் சுக்ரனாக இருக்கிறது.
சனி : ‘கதௌ மந்த:’ மிக மெதுவான நடை உள்ளது அம்பாள் பாதம். ‘மந்தன்’ என்று சனிக்கு ஒரு பேர். சனி, ரொம்ப மெதுவாக ஸஞ்சாரம் செய்யும் கிரஹம். ‘சனீச்வரன்’ என்று சொல்வது தப்பு. மற்ற கிரகம் எதற்கும் இல்லாத ‘ஈச்வர’ப் பட்டம் இதற்கு மட்டும் வருவதற்கு நியாயமில்லை. ‘சனைச்சரன்’ என்பதே சரியான வார்த்தை.‘சனை:’ – மெதுவாக, ‘சர’-ஸஞ்சரிப்பவன். அதைச் சுருக்கி சனி என்கிறோம்.
ராகு : ‘பஜதாம் தம: கேது:’ – அம்பாள் பாதம் தன்னை பஜிக்கிறவர்களின் தமஸுக்கு உலை வைக்கும் தூமகேதுவாக இருக்கிறது. தமஸ் என்றால் இருட்டு. துக்கம், அஞ்ஞானமெல்லாம் தான் பெரிய இருட்டு. தமஸ் என்று ராஹுவுக்கும் பெயர்.
கேது : கேது என்பது ஒன்பதாவது கிரகமென்று எல்லோருக்கும் தெரியும். ச்லோகத்தில் ராஹுவின் தன்மை மாத்திரம் நேரே அம்பாள் பாதத்துக்கிருப்பதாகச் சொல்லாமல் ஆனாலும் ‘தமஸ்’ என்ற வார்த்தையை வைத்து, மற்ற எட்டு கிரகங்களையும் நேரே அந்தச் சரண ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறது.”
யார் இந்த மூகர்…?
கவி காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி, மற்றும் 5 புலவர்கள் சேர்ந்து “நவரத்தினங்கள்” என்னும் புகழுடன் போஜராஜன் அரண்மனையில் போற்றப்பட்டனர். ஒரு சமயம் போஜராஜன் சபையில் யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி வருகையில் அன்னை பராசக்தியானவள் தண்டியையும் பவபூதியும் சிறந்த புலவர்கள் என்று கூறுகிறாள். இதனைக் கேட்ட காளிதாஸர் மிகுந்த கோபத்துடன் அவசரமாக ‘அப்படியென்றால் நான் யாரடி?’ என்று அம்பாளிடமே ஏகவசனத்தில் கேட்கிறார். அன்னையும் நிதானமாக ‘நீயே நான் தான்’ என்றவாறு தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை உணர்த்துகிறாள். ஆனாலும் காளிதாஸர் அவசரப்பட்டு அன்னையை அவதூறாக பேசியதற்கு தண்டனையாக மறுபிறவியில் ஊமையாக பிறக்கும்படி சாபமிடுகிறாள். காளிதாஸர் தாம் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிக்கும்படி வேண்ட, தேவியும் மனமிரங்கி, ”நீ ஊமையாக பிறந்தாலும் மீண்டும் பேசும்திறனும், கவிபாடும் திறனும் பெருவாய்” என்று அருளாசி வழங்கி வாக்களிக்கிறாள் அன்னை.
காலங்கள் உருண்டோடின…. சக்திபீடங்களில் முதன்மையான ஸ்ரீகாஞ்சி க்ஷேத்திரத்தில் தமது மறுபிறவியில், ஓர் அந்தண குடும்பத்தில் ஊமையாக பிறந்தார் காளிதாஸர். மூகர் என்ற பெயருடன் பால்யத்திலிருந்தே ஸ்ரீகாமாட்சி சன்னதியில் எப்போதும் அமர்ந்திருப்பார்… பக்கத்திலேயே ஒருஸ்ரீவித்யா உபாஸகரும் வாக்ஸித்தியை வேண்டி வழிபட்டு வந்தார். ஓரு நாள் அந்த உபாஸகரைக் கடாஷிக்கும் பொருட்டு அன்னை அவர் முன் பாலையாக தோன்றுகிறாள். அம்பிகையின் ஸெளந்தர்யத்தைக் கண்ட மூகர், தான் முன் ஜென்மாவில் செய்த சியாமளா தண்டகம் போன்ற கவிதைகளின் நினைவால் உந்தப்பட்டு, தேவியைப் பாட வாய் திறந்து ‘பே,பே’ என்றுசப்தமிடுகிறார். ஊமைச் சிறுவனின் உளறல் சப்தம் கேட்டு கண்விழித்த உபாஸகர், ஊமையின் அலறலுக்கு இந்த சிறுமியே காரணமென்று அவளை அந்த இடத்தைவிட்டு செல்லுமாறு உத்திரவிடுகிறார் ஸ்ரீவித்யா உபாஸகர். “சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்வலா” என்பதான சுத்த வித்தையே போன்ற பல்வரிசைகளில் ஊறி வந்த தாம்பூல ரஸத்தை தேவி மூகரின் வாயில் சேர்த்துவிடுகிறாள். உடனடியாக மூகருக்கும் வந்தது யார் என்பது முதலாக தனதுபூர்வ ஜென்ம தொடர்புகளெல்லாம் புரிகிறது. மேலும் அவர் பேசும் சக்தி மட்டுமல்லாது பாடல்களை புனையக் கூடிய கவிதாவிலாஸம் சித்தியாகிறது. இவர் ஸ்ரீகாமாட்சி மீது பாடிய 500 ஸ்லோகங்களே ”மூக பஞ்சசதி” என்று போற்றப்படுகிறது. இந்த ஸ்லோகங்களானது ஸ்ரீவித்யா மந்திரமே மாற்று உருக்கொண்டதாக சொல்லும்படியான விசேஷ அமைப்புடன் விளங்குகிறது. இந்த மூகரே பிற்காலத்தில் (கி.பி 398) காஞ்சி காமகோடி பீடத்தின் 20ஆவது ஆச்சாரியராக பட்டமேற்று 39 ஆண்டுகள் கழித்து கி.பி 437 ஆம் வருடம் ஸித்தி அடைந்தார்.
Taken from FB post
src: https://www.facebook.com/cvbhariharan/posts/1890279351033707- Karthik. R